Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts
Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts

Thursday, January 20, 2011

சிராவகர் அல்லது சாவகர்

சிராவகர் யார்?

சிலப்பதிகாரத்தில் வரும் “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்ற
வரியில் வரும்
”சாவக” என்ற சொல்லுக்கு பொருள் யாது என்பது தான் இங்கு (மின்தமிழ் குழுமம்)
விவாதிக்கப்பட்டு வருகிறது. சிராவகர் என்ற வடமொழிச் சொல் தமிழிலும்,
பிராகிருதத்திலும் சாவகர் என்று வரும். சாவகர் என்பது சமண
இல்லறத்தார்களைக் குறிக்கும். அதே சமயம், பெளத்த நூல்களில் அந்த
சொல் பெளத்த முனிவர்களைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. இடத்திற்கேற்றாற்
போல் பொருள் கொள்ளவேண்டும். என்னை? :-)

ஜைன துறவறத்தார் சிரமணர் அல்லது சமணர் என்று அழைக்கப்படுவர்.
(சமணர் என்றால் ஆசிவகரையும் குறிக்கும் என்று சில ‘அறிஞர்கள்”
கூறுவதுண்டு. அது பொருந்தாது. ஆதாரத்துடன் நிறுவ முடியும். பிறகு
ஒரு நாளில் இங்கு எழுதுவேன்) ஜைன இல்லறத்தார் சிராவகர் அல்லது
சாவகர். சமணர் ஏற்பது மகாவிரதம். சிராவகர் ஏற்பது அணுவிரதம்.
விரதம் இருவருக்கும் பெயரளவில் ஒன்றே ஆனாலும் அவற்றின்
“Magnitude” ல் சிறிய வேறுபாடுண்டு.

சாவக தர்மம் மனையறம் என்று அழைக்கப்படுவது போல், சாவகர்களை
இல்லற நோன்பிகள், உலக நோன்பிகள், இல்லற விரதிகள் போன்ற
சொற்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

விரதம் அல்லது நோன்பு

சிராவகர்கள் ஒழுகவேண்டிய விரதங்கள் பத்தாம். அவற்றுள் முதல்
ஐந்தும் ”அணுவிரதம்” என்றழைப்படும். இந்த அணுவிரதத்தை
அனைத்து சமண இல்லறத்தார்களும் கடைப்பிடிக்கவேண்டும் என்று
சமணம் சொல்லும்.

1. கொல்லாமை (ஓரறிவு உயிர்கள் விலக்கு)
2. பொய்யாமை
3. கள்ளாமை
4. பிறன்மனை விரும்பாமை
5. மிகுபொருள் விரும்பாமை

(இவைகள் அணுவிரதம் என்றழைக்கப்படும்)

6. ஊன் உண்ணாமை
7. கள் உண்ணாமை
8. தேன் உண்ணாமை
9. இரவு உண்ணாமை
10. குரவரை இகழாமை

இவற்றை திருக்கலம்பகம் என்ற நூல் அழகாகத்
தொகுத்துரைக்கும்.

“விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார், கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே” – திருக்கலம்பகம் (67)

அணுவிரத்தை அருங்கலச் செப்பு என்ற நூல்,

“பெரிய கொலை, பொய், களவொடு, காமம்
பொருளை வரைதலோடு ஐந்து” – அருங்கலச் செப்பு (66)

மேற்சொன்ன விரதங்களை கடைப்பிடிக்கவேண்டியது சாவகரின்
(இல்லறத்தார்) கடமை. எல்லாவற்றையும் கடைப்பிடித்தே ஆக
வேண்டும் என்று சமணம் எப்போதும் வற்புறுத்தியதில்லை.
தாங்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப முழு மனத்தோடுக்
கடைப்பிடிக்கவேண்டும் என்று தான் சமணம் சொல்கிறது.



இரா.பா,
சென்னை

Sunday, August 22, 2010

தெய்வம் தெளிமின்

தெய்வம் தெளிமின்

தமிழின் ஆதிகாவியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரம். இதன் சிறப்பை அறிந்து, பாரதியார் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். காவியங்கள் பொதுவாக அரசனைப் பற்றியோ அல்லது தெய்வத்தைப் பற்றியோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரம் தமிழின் முதல் காவியமாக மட்டும் திகழாமல், சாதரண நிலை மாந்தர்களை வைத்து எழுந்த முதல் காவியமும் கூட. அதுவும், பெண் மகளை வைத்துப் பாடபட்ட முதல் காவியமுமாகும். ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இப்பேற்பட்ட காவியத்தை யாத்தவர் இளங்கோவடிகளாவார்.

சிலப்பதிகாரக் காலம்

இதன் காலம் ஸ்திரமாக சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் 2ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர். “தமிழ்க் காவலர்கள்”  இன்னும் முன்னம் என்று கொள்வர். இக்கால நிர்ணயம் இங்கு தேவையில்லை யாதலால், கட்டுரையின் தலைப்பை நோக்கிச் செல்வோம். ;-)

இளங்கோவடிகளின் அறிவுரை

சிலப்பதிகாரத்தை முடிக்கும் முன்னர், இக்கதையைப் படித்தவர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லி அவைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறார். அப்பாட்டு,

”………………………..
என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறத் கேட்ட திருத்தகு நல்வீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”

என் உரை:

இளங்கொடியாளான கண்ணகியின் கதைக் கேட்ட நல்லவர்களே! கேளுங்கள்!!

1. கவலையும், துன்பமும் விட்டு ஒழியுங்கள்,
2. தெய்வம் எது என்று தெளியுங்கள்,
3. அப்படி தெளிந்து ஏற்றுக்கொண்டவர்களை பின்பற்றுங்கள்,
4. பொய் சொல்லாதீர்கள், புறங்கூறுதலை அகற்றுங்கள்,
5. புலால் உணவை விலக்குங்கள்,
6. பிற உயிர்களைக் கொல்லாதீர்கள், (கொல்லாமை கடைப்பிடியுங்கள்),
7. தானம் செய்யுங்கள்,
8. நோன்புகள் பல ஏற்றுக் கொள்ளுங்கள்,
9. பிறர்ச் செய்த உதவிகளை மறக்காதீர்கள்,
10. தீய நட்பை விலக்குங்கள்,
11. பொய்ச் சாட்சி சொல்லாதீர்கள்,
12. உண்மை மொழியினை விட்டு அகலாதீர்கள்,
13. அறவோர்களை நாடி செல்லுங்கள்,
14. அறவோர் அல்லாதவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்,
15. பிறர் மனைவியை தாயாக நினையுங்கள்,
16. நிர்கதியாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள்,
17. இல்லறத்தைப் போற்றுங்கள்,
18. தீயவைகளைச் செய்யாதீர்கள்,
19. குடியை விட்டுவிடுங்கள்,
20. திருடாதீர்கள்,
21. விலைமாதர்களிடம் செல்லாதீர்கள்,
22. பொய் பேசாதீர்கள்,
23. பயனற்ற பேச்சுகளை பேசாதீர்கள்,
24. இளமை நிலைக்காது,
25. செல்வம் நிலைக்காது,
26. உடம்பும் நிலைக்காது

ஆயுட் காலம் எப்போது முடியும் என்று தெரியாது, மரணமும் தவிர்க்க முடியாதது, அறம் ஒன்றே உய்விக்கும்! அறமே மறுமைக்கும் துணையாக பின் வரும். ஆதலின் அறம் செய்து வாழ்வாங்கு வாழுங்கள்!!

என்று தன் காவியத்தை முடிக்கிறார். மேற்சொன்ன அனைத்து அறிவுரையும் அப்படியே திருக்குறளில் எதிர் ஒலிப்பதையும் ஈண்டு நோக்குக!

தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்!!

..” தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்”

இந்த வரியில் இளங்கோவடிகளின் உள்ளக் கிடக்கை தெற்றென விளங்குகிறது. என் காவியத்தில், பல கடவுள்களை கூறியிருக்கிறேன், அவர்களில் உண்மையான தெய்வம் யார் என்று தெளியுங்கள். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை (தெளிந்தவர்களை) கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
அப்படி இளங்கோவடிகளில் நிறைந்த அந்த தெய்வம் யார்? இளங்கோ தன் காவியத்தில் ஒரு யுக்தியை கையாள்கிறார். கதையில் நிறைய மாந்தர்களை உலவ விட்டிருந்தாலும், தன் மனதில் பிரதிப்பளிப்பாக, கவுந்தியடிகளின் பத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கவுந்தியடிகள் கதாப்பாத்திரத்தை எடுத்துவிட்டுப் பார்த்தாலும், கதைக்கு எந்த பங்கமும் வராது. பின் ஏன் அந்தக் கதாப்பாத்திரம்? தன் சமயக் கொள்கையை கதையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கவுந்தி என்றப் பாத்திரத்தைப் படைத்துக் கதையை நகர்த்திச் செல்கிறார் இளங்கோவடிகள்.
இறைவாழ்த்தில் இயற்கையைப் பாடியவர், தன் உள்ளக்கிடக்கை சரியான நேரத்தில் கவுந்தியின் மூலமாக உள் நுழைக்கிறார்.

மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்” – (5)

என்று அருகப் பெருமானை வணங்கி, பின் கவுந்தியின் மூலமாக சமணக் கருத்துகளை ஆங்காங்கே தூவிச் செல்கிறார் இளங்கோவடிகள். அத்தொடு அல்லாமல் அப்பிராட்டியின் வாயிலாக,

“..ஒரு மூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா”

என்றும்,

“காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமம் அல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோன் அடிஇணை அல்லது
கைவரக் காணினும் காணா என்கண்
அருளறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லதென்”


என்றும்,

“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவம் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறா அது”

என்றும்,

“இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறுதர ஓதியென் மனம்புடை பெயராது”


என்று கூறுவதையும் ஈண்டு நோக்குக.

இதனால் சிலப்பதிகார ஆசிரியர் உள்ளம் யாது என்றும் அவர் எந்த தெய்வத்தை தெளிந்திருக்கிறார் என்றும் நாம் உணரலாம். அவரின் வாக்கை நாமும் பின்பற்றி,

”ஆதியில் தோற்றத்து பகவனை, மலர்மிசை நடந்த மன்னவனை, அறவாழி ஏந்திய அந்தணனை, எண்குணத்தானை, வாலறிவனை” வணங்கி ஏத்துவோமாக!

தெய்வம் தெளிமின்!!

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!
வாழ்க திருவறம்! வளர்க நல்லறம்!!

இரா.பா
சென்னை